வடக்கே வாலாட்டுவதுடன் நிற்காமல் தென்முனை தீவுகளிலும் கால்பதிக்கும் சீனா?

* காற்றாலை மின்சாரத்துக்காக ‘‘கம்பளம் விரிக்கிறது’’ இலங்கை

* இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு; நிராகரிப்பு

* தேச பாதுகாப்பு, ராமநாதபுரம் மீனவர் நலனுக்கு அச்சுறுத்தல்?

கீழக்கரை: இந்தியாவின் தெற்கே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிக அருகே உள்ள தீவுகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சீனா கால்பதித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் தெற்கே உள்ள குட்டி தீவு நாடு இலங்கை. கலாச்சாரம், பண்பாட்டில் இந்தியாவோடு நெருங்கிய தொடர்புடையது. ஆரம்பம் முதல் இந்தியாவோடு நெருக்கம் காட்டி வந்த இலங்கை, கடந்த சில ஆண்டுகளாக சீனாவோடு நெருங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, இலங்கையை தன் செல்லப்பிள்ளையாக பார்க்கிறது. கட்டமைப்பு வசதிகள், மேம்பாட்டு திட்டங்களுக்காக இலங்கையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை குவித்துள்ளது.

உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் இணைந்து செயல்படுவது சகஜமே. ஆனால் சீனா தற்போது இலங்கையுடன் காட்டும் நெருக்கம், இங்கிருந்தபடி இந்தியாவை எதிர்காலத்தில் அச்சுறுத்த எடுக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில், ‘‘கிழக்கு கன்டெய்னர் முனையம்’’ அமைக்க இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் கடந்த 2019ல் இலங்கை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு திடீரென கடந்த வாரம் ரத்து செய்தது.

இதேபோல் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை  இந்தியாவின் ஐஓசி நிறுவனம் பெற்றிருந்தது. கடந்த 2003ல் 35 ஆண்டுகால குத்தகைக்கு இக்கிடங்குகள் இந்தியா வசம் வந்தன. இந்த ஒப்பந்தத்தையும் இலங்கை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இலங்கை அரசு இந்தியாவிடம் வாங்கிய 400 மில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) முன்கூட்டியே திருப்பி செலுத்தி உள்ளது. இது கொரோனா பாதிப்புகளை சமாளிப்பதற்காக கடந்த 2020 ஜூலை மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பணத்தை திருப்பி செலுத்த 2022 நவம்பர் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால் முன்கூட்டியே கடனை இலங்கை அரசு திருப்பி செலுத்தி இருக்கிறது. இதன் பின்னணியிலும் சீனா இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாக இலங்கைக்கும், தமிழகத்திற்கும் நடுவே உள்ள நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க சீனாவை சேர்ந்த ‘‘சினோசர் - இடெக்வின்’’ நிறுவனத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற இந்திய நிறுவனம் தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்த தீவுகள் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் இருந்து வெறும் 48 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்தியாவின் மிக, மிக அருகே உள்ள இந்த தீவுகளில் சீனா கால் பதித்தால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தேவையற்ற அச்சுறுத்தல் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடக்கே வாலாட்டி வரும் சீனா, எதிர்காலத்தில் தெற்கிலும் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் இங்கு கால்பதித்திருக்கலாம் என இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் கருதுகின்றனர். எனவே இந்திய அரசு ராஜதந்திர ரீதியாக இந்த பிரச்னைகளை அணுகி வெகு விரைவில் தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

* கச்சத்தீவை மீட்பதே தீர்வு

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகி மாசானம் கூறுகையில், ‘‘‘‘நமது இந்திய கடல் எல்லைக்கு மிக அருகே உள்ள தீவுகளில் சீனா கால் பதிப்பது, மீனவர்களின் எதிர்காலத்திற்கும் மிக ஆபத்தானது. பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். மற்றொரு நாட்டு நிறுவனம் பாதுகாப்பு என்ற பெயரில் கடல் பகுதியில்  கூடுதல் படைகளை குவிக்க வாய்ப்புண்டு. இதற்கு முடிவு காண நமது கச்சதீவை மீட்பதே தீர்வாகும். நாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பதோடு, மீனவர்களும் பலன் பெறுவர்’’’’ என்கிறார்.

* நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்

ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பி நவாஸ்கனி கூறுகையில்,‘இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்து இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனில் கண்டிப்பாக உரிய துறை அமைச்சர்களிடம் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவேன். இதை சாதாரணமாக விட்டு விடக்கூடாது. அவசியம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது’ என்கிறார்.

Related Stories: