இங்கிலாந்துக்கு எதிரான டி.20 அணியில் இடம்; கோஹ்லியுடன் டிரஸ்சிங் ரூமை பகிர்வதில் ஆர்வமாக உள்ளேன்: ராகுல் திவேதியா நெகிழ்ச்சி

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் சென்னையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த 2 டெஸ்ட் அகமதாபாத்தில் நடக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் இரு அணிகள் இடையே 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி வரும் 12ம்தேதி நடக்கிறது. டி.20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோஹ்லி தலைமையிலான அணியில், ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பன்ட், இஷன் கிஷான், யுஸ்வேந்திர சகால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர், திவேதியா, புவனேஷ் குமார், தீபக் சகார், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் அணியில் உள்ளனர். விஜய் ஹசாரே தொடரில் நேற்று 94 பந்தில் 173 ரன்கள் விளாசிய இஷான் கிஷன்,  ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய அசத்திய ராகுல் திவேதியா உள்ளிட்டோர் புதுமுகங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ராகுல் திவேதியா கூறுகையில், இதுவரை, நான் ஐபிஎல்லில் விராட்கோஹ்லிக்கு எதிராக விளையாடினேன். இப்போது நான் அவருடன் விளையாடுவேன், அவருடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளேன். மற்றும் உலக கிரிக்கெட்டில் சில சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது மற்றும் வணிகத்தில் சிறந்ததை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வேன். உலகில் மிகச் சிறந்தவர்கள் ஐ.பி.எல்.இல் விளையாடுவதை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் அவர்களுக்கு எதிராக செயல்பட்டால், அது உங்கள் நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது. இந்த பருவத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்காக பங்கு அளித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றார். 27 வயதான ராகுல் திவேதியாவுக்கு கடந்த 4ம் தேதி ரிதி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>