கூட்டணிக்கு ஆள் தேடும் சசிகலா: ஜெயலலிதா சமாதியில் மீண்டும் சபதம் எடுக்க முடிவு

சட்டமன்ற தேர்தலை சந்திக்க சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் கூட்டணிக்கு பிற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 4 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். அவரின் வருகை அதிமுகவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சசிகலாவை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக தகவலும் வெளியாகியது. ஆனால், சென்னை வந்த சசிகலாவை இதுவரையில் அதிமுக மூத்த நிர்வாகிகளோ, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் என யாரும் சந்திக்கவில்லை. இதற்கு மாறாக சசிகலாவை அதிமுகவில் உள்ள பலரும் கடுமையாக விமர்சனம் செய்தவாறு உள்ளனர். இந்தசூழலில் சட்டமன்ற தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலை சந்திக்க சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தீவிரமாக தயாராகி வருவதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான நடவடிக்கையாக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுடனே சசிகலா நேரடியாக தொலைபேசியில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பெண் தலைவர் ஒருவர், கூட்டணி கட்சி தலைவர்களாக உள்ள 2 எம்.எல்.ஏக்கள் என 3 பேருடன் அவர் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘அதிமுகவை கைப்பற்றப்போவது நாங்கள் தான்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஒன்றிணைந்து செயல்படுவோம்’ இவ்வாறாக இந்த பேச்சுவார்த்தை இருந்துள்ளது. இதேபோல் சசிகலா கடந்த 17ம் தேதி தஞ்சாவூர் செல்ல இருப்பதாக இருந்தது. ஆனால், அப்பயணம் ரத்து செய்யப்பட்டது. வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடைபெற்று வரும் எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு முழுமையாக திறக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, அன்றைய தினம் சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்று சபதம் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்காகவே, அவர் தஞ்சாவூர் செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 24ம் தேதிக்கு பிறகு சசிகலா தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார். அன்றைய தினம் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமலுக்காவது கூட்டணி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் கிடைச்சிருக்கார். நமக்கு யாருமே இல்லைேய என அமமுக கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

Related Stories: