Sunday 50% தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயிலில் அதிகப்பட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3770 கோடியில் சென்னை, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அடுத்த தினம் பாலைவனம் போல் சென்னை மெட்ரோ ரயில்கள் காட்சியளித்தது.

இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில்களின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.

பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, மாண்புமிகு அம்மா அவர்கள், தொலைநோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார்கள். மாண்புமிகு அம்மாவின் அரசும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தின் கட்டம்-ஐ முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

 

118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-ஐஐ-க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015 இல் இருந்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகள் சேவையை துவக்கியது.  5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6 ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது.  இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில்களில் 2 கிலோமீட்டர் வரை பயணிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றமின்றி ரூ.10 ஆக உள்ளது. 2-5 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.20-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனைபோன்று, 5-12 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.40-லிருந்து ரூ.30 ஆகவும், 12-21 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 18-24 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.60 லிருந்து ரூ.50 ஆகவும், 24 கிலோமீட்டருக்கு மேல் கட்டணம் ரூ.70-லிருந்து ரூ.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனைபோல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத  தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக) என்றும் qr cod, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வரையறுக்கப்படாத மெட்ரோ கட்டணமாக புதிய வழித்தடத்தையும் சேர்த்து ரூ.100 ஆகவே வசூலிக்கப்படும்.

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கு அதே 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத கட்டணத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கு அதே ரூ.2500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பு நாளை மறுநாள் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: