குழப்பத்தில் இருப்பதால் அதிமுகவை கட்டுக்குள் வைத்திருக்கிறது பாஜ: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

 கண்டிப்பாக ஏற்படுத்தும். கண்ணுக்கு நேராக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மண்டையில் அடிப்பது போன்று அடிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் அதனால் பாதிக்கப்படுகிறான். இதனால் ஒட்டுமொத்த விலை வாசி உயருகிறது.

* குழம்புன குட்டையில் மீன் பிடிப்பது போன்று, அதிமுக கூட்டணியில் பாஜ தொகுதிகளை மிரட்டி பெறுவதாக விமர்சனம் எழுந்துள்ளதே?

  அதிமுக கூட்டணி ஏற்கனவே குழப்பத்தில் தான் இருக்கிறது. அதிமுகவும் குழப்பத்தில் தான் இருக்கிறது. ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் மாறி மாறி விளம்பரம் கொடுக்கின்றனர். போதா குறைக்கு சசிகலா வருகை குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதனால் நினைவிடத்தை கூட திறக்க முடியவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை கூட போலீஸ் பாதுகாப்புடன் மூடி வைத்துள்ளனர். கூட்டணி கட்சிகளும் இழுத்துக்கோ, புடுச்சிக்கோ என்பதாகத் தான் இருக்கிறது. ராமதாஸ் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை கொடுத்தவர். இந்த அரசை ஊழல் அரசு என்று சொன்னவர். இப்போது எப்படி மறுக்க முடியும். அவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்த மனு. அதை இல்லை என்று ராமதாசால் மறுக்க முடியாது. குழப்பத்தில் இருப்பதால் பாஜகவுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. அதனால் அவர்கள் கேட்கும் தொகுதியை கேட்டு வாங்க முயற்சி செய்வார்கள்.

* தெரிந்தே மக்கள் மீது விலை உயர்வு என்ற கடும் சுமையாக ஏற்றியிருக்கும் மத்திய அரசு தேர்தலுக்காக மீண்டும் அதை குறைக்க வாய்ப்பிருக்கிறதா?

 பாஜ அரசு கடைபிடிக்கக்கூடிய கார்ப்பரேட் மைய கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவு இது. ‘உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே தீரனும்’ என்று சொல்வார்கள். அது மாதிரி கார்ப்பரேட் கொள்கையை கடைபிடிக்கிறார்கள். அதை அவர்கள் கைவிடப் போறது கிடையாது.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தலுக்கு எந்த அளவுக்கு தயாராகி உள்ளது?

 மண்டல அளவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்தி வருகிறோம். 26,27ம்தேதி பிரகாஷ் கரத் வருகிறார். கடலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை ஆகிய 4 மண்டலங்களில் கூட்டம் நடத்துகிறோம். பிருந்தா கரத் 27,28ம் தேதிகளில் வருகிறார். அடுத்த மாதம் 4,5,6 ஆகிய 3 நாட்கள் எங்களது அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வருகிறார்.

Related Stories: