சசிகலாவை கட்சியில் இணைக்காவிட்டால் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காதா? கற்பனை என்கிறார் அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: சசிகலா இல்லாவிட்டால் ஒரு சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்பது விதைக்கப்படும் கருத்து என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 11, 37வது வார்டு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘‘சசிகலாவை அதிமுகவில் இணைக்காவிட்டால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் கிடைக்காது என்று பரப்பப்படும் தகவல் விதைக்கப்படும் கருத்து. அது இயற்கையான கருத்து அல்ல. தமிழ்நாட்டில் சாதி, சமய வித்தியாசம் இல்லாமல் அனைத்து சமுதாயங்களையும், அனைத்து ஜாதிகளையும் ஒருங்கிணைத்து போகக்கூடிய ஒரே கட்சி அதிமுக. ஜாதி வைத்து பேசி பிரசாரம் என்பதை என்றும் அதிமுக எடுத்தது கிடையாது.

அதிமுகவை எல்லா சமுதாய மக்களும் ஒன்றுபட்டு ஆதரிக்கிறார்கள். இதுவரை அப்படித்தான் இருக்கிறது, இனிமேலும் அப்படித்தான் இருக்கும். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர், ஒரு தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த தகவலும் அவரிடமிருந்து இல்லை. இதுதான் நிஜம். எங்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே நாங்கள் இணைந்து இருக்கிறோம் என நம்புகிறோம். 88 தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் முடித்துவிட்டார். இன்னும் சில நாட்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் தொடங்க உள்ளார் என்றார்.

Related Stories: