ஆந்திரா - ஒடிசா எல்லை மோதல் பஞ்சாயத்து தேர்தலால் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி:  ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே சுமார் 50 ஆண்டுக்கு மேலாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. இரு மாநில எல்லையில் அமைந்துள்ள 3 கிராமங்களுக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடுகின்றன. இது தொடர்பாக கடந்த 1968ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடியது ஒடிசா அரசு. இந்த வழக்கு கடந்த 2006ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், பிரச்னை தீரும் வரை தற்போதைய நிலை தொடர இரு மாநில அரசுகளும் பரஸ்பரம் சம்மதித்தன.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி சர்ச்சைக்குரிய 3 கிராமங்களில் ஆந்திர மாநில அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தியது. இதனால், தேர்தல் நடத்திய ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் மீது ஒடிசா அரசு உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கான்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘‘ ஒடிசாவின் பகுதிகளில் நாங்கள் அத்துமீறவில்லை. ஆந்திர அரசு தனது சொந்த பிரதேசங்களை மட்டுமே நிர்வகித்து வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க ஒடிசா அரசுக்கு நீதிபதிகள் 4 வார காலம் அவகாசம் அளித்துள்ளனர்.

Related Stories: