விவசாயிகள் நடத்திய மறியலால் பஞ்சாப், அரியானாவில் ரயில் சேவை பாதிப்பு: பல இடங்களில் ரயில்கள் ரத்து

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனால், விவசாயிகள் கடந்த 6ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு யுக்தா கிசான் மோர்சா அமைப்பு கடந்த வாரம் அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடந்தது. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் பஞ்சாப், அரியானா, உபி.யில் ரயில் சேவை முடங்கியது. இந்த மறியலின்போது நடுவழியில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு குடிநீர், பால், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கி தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை விவசாயிகள் எடுத்துரைத்தனர். அதே ேநரம், பீகாரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாட்டில் எந்த இடத்திலும் அசம்பாவிதங்களோ, வன்முறைகளோ நடக்கவில்லை.

25 ரயில் சேவை மட்டுமே ரத்து

வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், ``விவசாயிகள் போராட்டத்தினால், மிக குறைந்த பாதிப்பே இருந்தது. 25 ரயில்களின் சேவை மட்டுமே நிறுத்தப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ரயில்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை. வழக்கம் போல் ரயில்கள் இயங்கின. சில இடங்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே வழி மறிக்கப்பட்டன,’’ என்றார்.

Related Stories: