நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? சமூக ஆர்வலர் கோபி (கொளத்தூர்)

மத்தியில் பாஜ ஆட்சியில் படிப்படியாக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு தற்போது அது ரூ.800 வரை சென்று கொண்டிருக்கிறது.  இதனால் வீடுகளில் அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் மக்களின் தலையில் சென்று சேர்கிறது. வீடுகளில் வாங்கும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டி உள்ளது. இதற்கு மானியம் தரப்படும் என்று அரசு கூறினாலும் மாதம், மாதம் வரவேண்டிய மானியத்தொகை வங்கி கணக்கிற்கு வந்து சேர்வதில்லை. முதலாளி வர்க்கத்தை மட்டும் ஆதரிக்கும் அரசு எப்பொழுது அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஆட்சி நடத்தும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மத்திய அரசுக்கு புரிய வைக்கின்ற ஒரு பதிலை மாநில தேர்தலில் மக்கள் பிரதிபலித்தால் மட்டுமே சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மத்திய அரசுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

கல்யாண செலவு கேட்பாங்களா..?

தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் கல்யாணம் நிச்சயம் செய்தவர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர். திருமண மண்டபம், நகை, ஜவுளி என ஏகப்பட்ட செலவு இருக்கிறது. நடத்தை விதிகள் அமலானால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்து செல்ல முடியாது. எப்படி இந்த சூழலை சமாளிக்க போறோம் என திருமண வீட்டார் இப்போதே கலக்கமடைந்துள்ளனர். கல்யாண பத்திரிக்கை காட்டினாலும் பணத்திற்கான ஆதாரம் கேட்பார்களே, தேர்தல் பிரிவு, விசாரணை, கருவூலத்தில் பணம் ஒப்படைத்து, வருமான வரி விசாரணை முடிந்த பின்னர் தான் பணம் தருவார்கள் என யோசனையில் இருக்கிறார்கள். திருமண மண்டப உரிமையாளர்களோ, இப்பவே அட்வான்ஸ் கொடுங்க, ஏகப்பட்ட கெடுபிடி செய்வாங்க, கடைசி நேரத்தில் வராதீங்க என அவசரப்படுத்தி வருகிறார்கள். நடத்தை விதிகள் விசேஷ வீட்டினர் மட்டுமின்றி தொழில் செய்பவர்களை பாடாய் படுத்தும். தேர்தல் முடியும் வரை தொழில் நடத்த முடியுமா என யோசனையில் இருக்கிறார்கள். பறக்கும் படையின் சோதனையில் சிக்காமல் பணம் எப்படி எடுத்து செல்வது என சிலர் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: