4 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்: வள்ளியூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

நெல்லை: 4 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நெல்லையில் பரப்புரையின் போது ஒரு ஆண் குழந்தைக்கு முதல்வர் தர்ஷன் என பெயர் சூட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டு மக்களுக்கு 30 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அதிமுக தந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா 15 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். மறைந்த முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருபெரும் தலைவர்கள் வழியில் அதிமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை இப்பகுதிக்கு வழங்கிய அரசு எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு.

விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு. உலகிலேயே பல நாடுகளில் விலையில்லா மடிக்கணினி கிடையாது; கல்வியில் புரட்சி ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகளை கொண்டுவந்தது அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து , எல்லா துறைகளிலும் தேசிய அளவில் அதிமுக அரசு விருதுகளை பெற்று வருகிறது. முதலமைச்சரின் சிறப்பான குறைதீர் திட்டம் மூலம் பெறப்பட்ட 5,20,000 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே அரசு அதிமுக அரசு. சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் இந்தியா அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நவீன உலகத்தில், மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க, அரசை எளிதில் அனுக 1100 திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.884 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என கூறினார்.

Related Stories: