கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை தொடர்ந்து திரிகோணமலை எண்ணெய் கிடங்கும் இந்தியாவிடம் இருந்து கை நழுவியது: அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் இலங்கை

கொழும்பு: இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட 101 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. இவற்றை புனரமைத்து, பயன்படுத்தும் ஒப்பந்தத்தை இந்தியாவின் ஐஓசி நிறுவனம் பெற்றிருந்தது. கடந்த 2003ல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 35 ஆண்டு குத்தகைக்கு இந்த கிடங்குகள் இந்தியா வசம் வந்தன. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில கொழும்புவில் அளித்த பேட்டியில், ‘‘இந்திய தூதருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீண்டும் இலங்கை வசமே கொண்டு வருவதற்கான சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது,’’ என்றார். சமீபத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி சரக்கு முனையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக இந்தியா-ஜப்பான்-இலங்கை இடையே செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்தது. அடுத்த சில நாளிலேயே திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்கும் இந்தியா வசமிருந்து நழுவி உள்ளது.

* இயற்கையிலேயே ஆழமானது

உலகில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் திரிகோணமலை துறைமுகமும் ஒன்று. இயற்கையிலேயே ஆழமான இந்த துறைமுகம் இந்திய பெருங்கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், ரேடாரில் சிக்காமல் நீர் மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்களை இங்கு எளிதாக நிறுத்தி வைக்க முடியும்.

* ஏன் முக்கியத்துவம்?

இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டு திரிகோணமலை துறைமுகத்தில் கால் பதிக்க அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. சீனாவும் இந்திய பெருங்கடலிலும் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது. இதுபோன்ற எந்த நாடும் இலங்கையில் காலூன்றி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக வந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு திரிகோணமலை துறைமுக எண்ணெய் சேமிப்பு கிடங்கு விஷயத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, அங்கு வலுவாக காலூன்ற நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: