தற்கொலை செய்வதாக நினைத்து காப்பாற்ற முயன்ற மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாஜி ராணுவ வீரர்: வேலூரில் பரபரப்பு

வேலூர்: வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). முன்னாள் ராணுவ வீரர். சென்னை எம்எல்ஏ விடுதியில் செக்யூரிட்டி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் பெங்களூருவில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை ெசய்கிறார். மற்றொரு மகன் வினோத்(25), 10ம் வகுப்பு படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இவரது மகளுக்கு சமீபத்தில் 2வது குழந்தை பிறந்து தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் தினமும் தந்தையும், மகனும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார்களாம். இந்நிலையில் கடந்த 4 நாளுக்கு முன் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சுப்பிரமணிக்கும், அவரது மகன் வினோத்துக்கும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு நடந்துள்ளது.

அப்போது தந்தையும், மகனும் முழுபோதையில் இருந்துள்ளனர். இந்த தகராறை மகள் தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது சுப்பிரமணி மகளை திட்டியதுடன், சாப்பாட்டு தட்டை மகள் மீது வீசியுள்ளார். இதை வினோத், தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகனையும், மகளையும், மனைவியையும் வீட்டில் இருந்து வெளியில் தள்ளி கதவை உள்பக்கமாக தாழ் போட்டுக்கொண்டுள்ளார். தந்தை தற்கொலை முடிவை எடுத்து விடுவாரோ? என அச்சமடைந்த வினோத், கதவை வேகமாக தட்டி அழைத்துள்ளார். திடீரென கதவை திறந்த சுப்பிரமணி தான் வைத்திருந்த துப்பாக்கியால் வினோத்தை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்பிரமணி தப்பியோடினார். இதுபற்றி வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, அடுக்கம்பாறையிலேயே போதையில் சுற்றி கொண்டிருந்த சுப்பிரமணியை கைது செய்தனர்.

Related Stories: