ஜெயிக்க மாட்டேன்; ஆனாலும் போட்டியிடுவேன்: பரிதாப பத்மராஜன்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் நாள்தோறும் பரபரப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை எதிர்த்து களத்தில் குதித்து கலகலப்பூட்ட ஆயத்தமாகி வருகிறார், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தமிழக தேர்தல் மன்னன் பத்மராஜன். ‘‘1988ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். 31 லோக்சபா, 40 ராஜ்யசபா, 65 அசெம்பிளி, 2 எம்எல்சி, 3 சேர்மன், 2 பஞ்சாயத்து தலைவர், 4 வார்டு உறுப்பினர், 31 கூட்டுறவு சங்கங்கள் என்று போட்டிக்கு சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளேன். இந்தியாவின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களையும், பிரபலங்களையும் எதிர்த்து போட்டியிட முதல் ஆளாக மனுதாக்கல் செய்வதுதான் நம்ம ஸ்பெஷல்.

5 ஜனாதிபதிகள், 5 உதவி ஜனாதிபதிகள், 4 பிரதமர்கள், 13 முதலமைச்சர்கள், 14 மாநில அமைச்சர்கள், 7 அரசியல் கட்சி தலைவர்கள், 17 விஐபிக்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். உருட்டல், மிரட்டல், கிண்டல், கேலி, எகத்தாளம், ஏளனம் என்று எல்லாத்தையும் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அதோடு இதுவரை டெபாசிட் செலுத்திய வகையில் ₹50 லட்சம் வரை இழந்துள்ளேன். ‘நீங்க வேற லெவல்’ என்று புகழ்ந்து பேசும் நெருங்கிய நண்பர்கள் கூட, எனக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதுதான் நான்கற்ற தேர்தல் பாடம். நிச்சயமாக இனிவரும் எந்த தேர்தலிலும் நான் ஜெயிக்க மாட்டேன். ஆனாலும் போட்டியிடுவேன்’ என்கிறார் பத்மராஜன்.

Related Stories: