மார்த்தாண்டத்தில் இன்று அதிகாலை பரபரப்பு: சாலை பள்ளத்தில் புதைந்த அரசு பஸ்...3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக விளங்கும் பெரிய நகரம் மார்த்தாண்டம். இங்கு பல ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படவே மார்த்தாண்டம் - திருவனந்தபுரம் ேதசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து வெட்டுவெந்நி வரை மேம்பாலத்தில் கீழ் உள்ள சாலையில் ரூ.71 லட்சத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கின. இதற்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் நடந்து வந்தது. இந்த பணி பல வாரங்களை கடந்தும் முடிவடையவில்லை.

இதற்கு பொது மக்கள் எதிர்ப்பதை தெரிவித்து வந்தனர். இதையடுத்து குழித்துறை நகராட்சியில் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடந்தது. முடிவில் பணிகளை விரைவுபடுத்தி ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. ஆனால் தோண்டிய பள்ளங்ள் சரிவர மூடப்படவில்லை. தாரும் போடவில்லை. இதனால் சாலை மேடும் பள்ளமுமாக காட்சி அளித்தது. இந்த வழியாக ஒரு கனரக வாகனம் தான் செல்ல முடியும் என்ற நிலையில், சாலை பள்ளத்தால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதற்கிடையே பணிகள் முடிந்து சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இனயம் செல்லும் அரசு பஸ் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிநீர் குழாய் தோண்டி சரிவர மூடாமல் இருந்த பெரிய பள்ளத்தில் முன்பக்க டயர் புதைந்தது.  உடனே பள்ளத்தில் இருந்து பஸ்சை மீட்க பல வழிகளிலும் டிரைவர் போராடினார். ஆனால் அவரால் முடியவில்லை.  தொடர்ந்து பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர். இதனிடையே அரசு பஸ்சின் பின்னால் வந்த வாகனங்கள் முன்பு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி தவித்தன.

இந்த தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார், போக்குவரத்து போலீசார், பணிமனை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து ஜேசிபி கொண்டு வரப்பட்டு பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியை தொடங்கினர். சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  இதுகுறித்து மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் கூறியாதவது; மேம்பாலத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடிவிட்டு உடனே தார் சாலை அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: