சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்: அம்னெஸ்டி இந்தியாவின் ரூ.17 கோடி வங்கி டெபாசிட்களை முடக்கியது அமலாக்கத்துறை

டெல்லி: சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மனித உரிமைகள் நல அமைப்பான அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் ரூ.17 கோடி வங்கி டெபாசிட்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, சர்வதேச அளவிலான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பாகும். சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா (ஏஐஐபிஎல்), இந்தியன்ஸ் ஃபார் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்ரஸ்ட்(ஐஏஐடி) ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அமைப்புகளும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளதால், இரு அமைப்புகளுக்கும் சொந்தமான ரூ.17.66 கோடி வங்கி டெபாசிட்கள் முடக்கப்பட்டுள்ளன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பல்வேறு பிரிவுகளான ஏஐஐபிஎல், ஐஏஐடி, ஏஐஐஎப்டி, ஏஐஎஸ்ஏஎப் ஆகியவை மீது பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழும், குற்றச்சதியின் கீழும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டு அம்னெஸ்டி இந்தியா அறக்கட்டளை லண்டனில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனலில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள மத்திய அரசின் அனுமதி பெற்று இருந்தது.

ஆனால் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் கிடைத்ததையடுத்து அந்நியச் செலாவணி பரிவர்த்தனைச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவதையடுத்து, பணம் பெரும் அனுமதி எப்சிஆர்ஏ அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து புதிய முறையில் பணம் பெறும் முறையை அம்னெஸ்டி இந்தியா கையாண்டது. இது தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்னேஷனல் இந்தியா அமைப்பின் பல்வேறு சொத்துக்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன. இப்போது ரூ.17.66 கோடி வங்கி டெபாசிட்கள் முடக்கப்பட்டதையடுத்து, இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களி்ன் மதிப்பு ரூ.19.54 கோடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: