‘‘எத்தனை முறை குப்புற விழுந்தாலும் என் மீசையில மண் ஒட்டல’’: காமெடி செய்யும் தேர்தல் மன்னன்

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாள்தோறும் பரபரப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை எதிர்த்து களத்தில் குதித்து காமெடி செய்ய  ஆயத்தமாகி வருகிறார் தமிழக தேர்தல் மன்னன் பத்மராஜன். இதுபற்றி அவர் கூறியதாவது: 1988ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். 31 லோக்சபா, 40 ராஜ்யசபா, 65 அசெம்பிளி, 2 எம்எல்சி, 3 சேர்மன், 2 பஞ்சாயத்து தலைவர், 4 வார்டு உறுப்பினர், 31 கூட்டுறவு சங்கங்கள் என்று போட்டிக்கு சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளேன். இந்தியாவின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களையும், பிரபலங்களையும் எதிர்த்து போட்டியிட முதல் ஆளாக மனுதாக்கல் செய்வது தான் நம்ம ஸ்பெஷல்.

5 ஜனாதிபதிகள், 5 உதவி ஜனாதிபதிகள், 4 பிரதமர்கள், 13 முதலமைச்சர்கள், 14 மாநில அமைச்சர்கள், 7 அரசியல் கட்சி தலைவர்கள், 17 விஐபிக்கள் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். உருட்டல், மிரட்டல், கிண்டல், கேலி, எகத்தாளம், ஏளனம் என்று எல்லாத்தையும் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அதோடு இதுவரை டெபாசிட் செலுத்திய வகையில் ₹50 லட்சம் வரை இழந்துள்ளேன். எந்த தேர்தலிலும் நான் ஜெயிக்க மாட்டேன் என்பது நிச்சயம். ஆனாலும் போட்டியிடுவேன். வெற்றி என்பது ஒரு போதை. அது கொஞ்ச நேரம் மட்டுமே நிலைக்கும். தோல்வி என்பது வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் பாதை. தேர்தல் தோல்வியாளனாக இருந்து தோல்வி ஒரு பொருட்டே அல்ல என்பதை இளைய தலைமுறைக்கு உணர்த்துவதே எனது கொள்கை. களத்தில் ஒரு முறை கூட, வெற்றியை பார்க்காத என்னை `தேர்தல் மன்னன்` என்று மக்கள் அழைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தொடர்ந்து தோற்றாலும் நானே தேர்தல் மன்னன் என்கிறார் பத்மராஜன்.

Related Stories: