மியான்மரில் ராணுவம் அட்டூழியம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு, தடியடி

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தற்போது முக்கிய நகரங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பல நகரங்களில் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் ரோந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக நள்ளிரவில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை விடுவித்து வன்முறை சம்பவங்களை நடத்துவதாகவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டாலேவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு சுமார் 10 வாகனங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் வந்திறங்கினார்கள். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். சில போராட்டக்காரர்கள் துப்பாக்கி முனையில் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டனர்.

தடியடி நடத்தப்பட்டதோடு, ரப்பர் குண்டுகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மியான்மர் அரசின் ஆலோசகரான ஆங் சாங் சூகி ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தை மீறியதாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டதாக சமீபத்தில் ராணுவம் அறிவித்தது. சூகியின் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் நாளை வரைஅது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: