மத்திய கைலாஷ் அருகே ரேஷன் அரிசி ஏற்றிவந்த லாரி சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது

சென்னை: மத்திய கைலாஷ் சிக்னல் அருகே கடந்த 13ம் தேதி சாலை நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு தண்டையார்பேட்டையில் இருந்து தரமணி ரேஷன் குடோனுக்கு 100 அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, இந்த பள்ளத்தில் சிக்கி, அரிசி மூட்டைகளுடன் கவிழ்ந்தது. அதிகாலை  என்பதால் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார். சாலையில் லாரி கவிழ்ந்ததால், சர்தார் பட்டேல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கிரேன் உதவியுடன் லாரியை ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். சாலையில் விழுந்த அரிசி மூட்டைகளையும் அகற்றினர்.

Related Stories: