தேர்தல் நேரத்தில் ஊத்திக் கொடுக்க கள்ளச்சாராய விற்பனையா வாட்ஸ்அப்ல புகாரை தட்டுங்க: நம்பரை வெளியிட்டது மதுவிலக்கு அமலாக்க பிரிவு

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதங்களாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் கிராமப்புறங்களில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு என வட மாவட்டங்களில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகளவில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் குடிமகன்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் எரி சாராயம் தான் அதிகளவில் வழங்கப்படுகிறது. இதற்காக மலை மற்றும் ஆற்றுப்படுகையில் கள்ளச்சாராம் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் சாவுகள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுபோன்ற சாவுகள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடைபெறாமல் தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கள்ளச்சாராயம், எரிசாராயம், போலி மதுபானங்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் 24 மணி நேரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் எளிமையாக புகார் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்: 6374111389 மற்றும் டிவிட்டர் பக்கத்தில் @manithan_yes மற்றும் 24 மணி நேரம் இயங்கும் 10581 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். வாட்ஸ்அப் எண்ணில் புகைப்படத்துடனும் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் பொதுமக்கள் குறித்து விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.

Related Stories: