காதலர் தினத்தில் சுற்றுலாத்தலங்களில் காதலர்கள் முகாம்

ஊட்டி : நாடு முழுவதும்  நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான  ஊட்டியில் ஏராளமான காதலர்கள் குவிந்தனர். உலகம் முழுவதும் நேற்று  காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் உள்ள  சில நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் நடந்தது.

காதலர்  தினத்தை கொண்டாடுவதற்காக அண்டை மாநிலங்களை சேர்ந்த உள்ள காதல் ஜோடிகள்  ஊட்டியில் முகாமிட்டிருந்தனர். இதுதவிர வெளியூர்களை சேர்ந்த காதல்  ஜோடிகளும் ஊட்டியில் உலா வந்தனர். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,  படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர் வீழ்ச்சி, தொட்டபெட்டா போன்ற  சுற்றுலா தலங்களில் ஏராளமான இளம் ஜோடிகளை காண முடிந்தது. காதலர் தினத்தை  முன்னிட்டு நேற்று ஊட்டியில் உள்ள ரோஜா மலர் விற்பனை நிலையங்கள், வாழ்த்து  அட்டைகள் மற்றும் கிப்ட் கடைகளில் இளவட்டங்களின் கூட்டம் காணப்பட்டது.

இந்து  அமைப்புகளால் காதலர்களுக்கு பிரச்சனை ஏற்பட கூடும் என்பதால் தாவரவியல்  பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மஞ்சூர்:  மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி, கிண்ணக்கொரை, பென்ஸ்டாக், அன்னமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் நேற்று ஏராளமான காதலர்கள் முற்றுகையிட்டனர்.

குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து அதிகளவில் காதல் ஜோடிகள் வந்திருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் குவிந்த காதலர்கள் அணைகட்டு மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து காதலர் தினத்தை கொண்டாடினார்கள். காதல் ஜோடிகளோடு புதுமண தம்பதிகளும் ஏராளமானோர் காணப்பட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு மஞ்சூர் பகுதியில் வெளியூர் வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டது.

Related Stories: