கேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: உரிமையாளர் கைது

சென்னை: கேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்ைப ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில், ஆவடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தினசரி இங்கு உணவு சமைக்கப்பட்டு காட்டரம்பாக்கம், இருங்காட்டுகோட்டை பகுதியை சுற்றி உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்குள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், அதை சுத்தம் செய்ய வெங்கடேசன் முடிவு செய்தார். இதற்காக, காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் (41), பாக்கியராஜ் (40) மற்றும் அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகிய 3 தொழிலாளர்கள் நேற்று அழைத்து வரப்பட்டனர். இவர்கள், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொடங்கினர். அப்போது, மூவரில் ஒருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் 2 பேரும், அவரை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது அவர்களும் விஷவாயு தாக்கி விழுந்து, சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி கேட்டரிங் சர்வீஸ் ஊழியர்கள் சோமங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், இருங்காட்டுகோட்டை தீயணைப்பு வீரர்களோடு சம்பவ இடத்திற்கு சென்று, கழிவுநீர் தொட்டியில் இறங்கி, மூவர் உடலையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலங்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: