பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு தபோவன் சுரங்கத்தில் இருந்து 8 ஊழியர்கள் சடலம் மீட்பு: மற்ற ஊழியர்களின் கதி தெரியவில்லை

டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ளத்தில் தபோவன் நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்களில் நேற்று 8 சடலங்கள் மீட்கப்பட்டது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சுரங்கத்தில் சிக்கிய மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. உத்தரகாண்டில் கங்கை ஆற்றில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. தபோவன் நீர்மின் நிலையத்தின் சுரங்கத்தில் சிக்கிய 30 ஊழியர்களை மீட்கும் பணி நடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. சுரங்கத்தில் நேற்று முன்தினம் துளை போடப்பட்டு, கேமரா மூலம் அவர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த மீட்புப் பணியின்போது சுரங்கததில் இருந்து 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. விபத்து நடந்து ஒரு வாரமாகி விட்டதால், சுரங்கத்தில் சிக்கிய மற்றவர்களின் கதியும் இப்படிதான் இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், வெள்ளத்தில் காணாமல் போன 158 பேரின் கதியும் என்னவென்று தெரியவில்லை. பல இடங்களில் சேறும் சகதியுமாகவும் இருப்பதால் மீட்புப்பணி சவாலாக உள்ளது. ஆனாலும், நம்பிக்கையுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

* குட்டிகளை தேடும் நாய்

சமோலி மாவட்டத்தில் காணாமல் போன தனது 4 நாய்க்குட்டிகளை தேடி குரைத்தபடியே ஒரு நாய் சுற்றி வருகிறது. மீட்பு பணிகள் நடக்கும் இடங்களில் நின்று உற்று கவனித்தபடி உள்ளதாகவும், சில நேரங்களில் நதிக்கரைக்கும், மலையில் சரிவடைந்த பகுதிகளிலும் அலைந்து கொண்டுள்ளது. எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதும், உள்ளூர் மக்கள் அதற்கு உணவு வைத்த போதும் சாப்பிடாமல் தவிர்ப்பதுமாக இருப்பதால் காண்போர் மனதை கனக்க வைத்துள்ளது.

Related Stories: