தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் 2 மடங்கு  கட்டணம் செலுத்த வேண்டுமென மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பண்டிகை காலங்களில் மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டது. சில்லறை வழங்குவதிலும் சிக்கல்கள் இருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தேவையின்றி பெட்ரோல், டீசல் விரையமானது.

இதற்கு தீர்வு காணும் வகையில், டிஜிட்டல் முறையிலான பாஸ்டேக் கட்டண முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. பாஸ்டேக் வேலட்டில் வாகன ஓட்டிகள் வேண்டிய அளவுக்கு பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதன் மூலம், சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறையும். கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

பின்னர், பாஸ்டேக் பெறுவதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு கால அவகாசம் டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதிலும் சிக்கல் நீடித்ததால் 2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு, பிப்ரவரி 15ம் தேதி வரையில் இறுதி கெடு விதித்தது. இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில நாட்களுக்கு முன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் கால அவகாசம் இன்றுடன் முடிவதைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘15ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறை 2008ன்படி, பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் 2 மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்,’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

* 10% மட்டுமே பாக்கி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஏற்கனவே 3 முறை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. பாஸ்டேக் இல்லாதவர்கள், இனி விரைவில் அதை பெற வேண்டும். சில இடங்களில் 90 சதவீதம் வரையில் பாஸ்டேக்குகள் எடுக்கப்பட்டு விட்டன. இன்னும் 10 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது,’’ என்றார்.

Related Stories: