வாழைத்தார்களுக்கு போதுமான விலை நிர்ணயம்: நாங்குநேரி ரூபி மனோகரனிடம் விவசாயிகள் வேண்டுகோள்

நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் நாங்குநேரி ரூபி மனோகரன், களக்காடு வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட படலையார்குளம் மற்றும் புதூர் கிராம காங்கிரஸ் கமிட்டி, மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் களக்காடு பகுதியில் வாழை தோட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். நெல் பயிருக்கு ஆதார விலையும், வாழைத்தார்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் வேண்டும் என்று விவசாயிகள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். களக்காடு பகுதி முழுவதும் பல ஆண்டுகளாக வாழை பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் பயிர் செய்யும் விலையைவிட விற்பனை விலை மிகவும் குறைவாக உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.

அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூபி மனோகரனிடம் வலியுறுத்தினர். பின்னர், வெள்ளங்குளி கிராமத்தில் வெள்ள நீர் கால்வாய் தலைமதகு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ள நீர் கால்வாய் பணிகள் 2009ம் ஆண்டிலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ள நீர் கால்வாய் பணிகளை, தமிழக அரசு தலையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். பாளை வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி விளையாட்டு கிராமம் என்ற மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தி, அத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: