சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், மின் வேலி அமைக்க மானியம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வேளாண் நீர்ப் பாசனத்துக்கு  தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காதபடியும், விளைபொருட்களின் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் தமிழக அரசு சார்பில் மானியத்தில் சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மற்றும் மின் வேலி அமைக்கப்படுகிறது. இந்தாண்டில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 13 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு, 8 எண்கள் சூரியச க்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான ஏசி மற்றும் டிசி மோட்டார் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் 19.82 லட்சத்தில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சூரிய ஒளி மின்வேலி அமைப்பதினால் விலங்குகள், வேட்டைகாரர்கள், அந்நியர்களின் ஊடுருவல்கள் தடுக்கப்படும். அதனால் விளைபொருட்களின் வருவாய் இழப்பு இல்லாமல், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை (235), 7 வரிசை (273), 10 வரிசை (325) அமைப்பை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை 1245 மீட்டர் வரை மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். மேலும் சூரிய ஒளி மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 2.18 லட்சம் மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு, வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, வேளாண் விரிவாக்க மையம், பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் என்ற 90030 90440  கைபேசி எண்ணிலும், செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, 487 அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35 என்ற 99529 52253 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: