விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைப்பது கமிஷனுக்காக மட்டும்தான்: தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லுச்சாமி

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் புதிதாக சாலைகள் அமைத்து கொண்டே இருக்கின்றனர். இதன் உள்நோக்கம் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கணிசமான அளவு கமிஷன் வரும் என்பதற்காக தான் இப்படி போடுகின்றனர். அதனால், தான் தேவையில்லாத இடங்களில் கூட புதிதாக சாலைகளை அமைப்பது, அகலப்படுத்துவது என்று தொடர்ந்து செய்துக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு, வேறு எந்த மாற்று நோக்கம் இருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறு சாலை அகலப்படுத்தும்போது, சாலையோரங்களில் வைக்கப்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலை போடுவதை காரணம் காட்டி விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இப்போதைக்கு உலகம் முழுவதும் வெப்பமயமாகி வருகிறது. பருவநிலை மாறுகிறது. இங்கிலாந்து, அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு, வரலாறு காணாத வறட்சி, ஆஸ்திரேலியாவில் வனங்கள் பத்தி எரிகின்றன. கலிபோர்னியாவில் வனங்களே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணம் மரங்கள் அழிப்பு தான். தாவரங்கள் அழிப்பு தான்.

சாலை விரிவாக்கத்தால் தாவரங்கள் அழிக்கப்படுகிறது. சாலையோரத்தில் நீங்கள் பார்த்தாலேயே தெரியும். எல்லா இடங்களிலும் மரங்கள் இருந்தது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யும்போது அந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட இடத்தில் கன்றுகள் வைக்கிறார்கள். ஆனால், முறையாக பராமரிப்பதில்லை. பெயருக்கு கன்றுகள் வைக்கின்றனர். தொடர்ந்து 2 வருடம்  தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆடு, மாடுகள் கடிக்காதபடி பராமரிக்க வேண்டும். அவ்வளவு பராமரிப்பு இருந்தால் தான் நீடித்து நிற்கும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை.இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இன்றைக்கு விவசாயத்தில் நாம் தன்னிறைவு பெறவே இல்லை. நாட்டில் சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். பருப்பு 60 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். ஒரு விவசாய நாட்டில் விவசாய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமே தவிர இறக்குமதி செய்யக்கூடாது. இறக்குமதி செய்தால் அது தேசிய அவமானம். முதலில் உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். உலக அளவில் பஞ்சம் வரும் போது எந்த நாட்டுக்காரனும் நமக்கு ேதவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டான்.

அப்போது கொத்து, கொத்தாக மடிய வேண்டிய நிலை ஏற்படும். விவசாயத்துக்கு தன்னிறைவு பெற்று விட்டு அதன் பிறகு சாலை போடுங்கள். விவசாயத்தில் தன்னிறைவு இல்லாத நிலையில், சாலைகளுக்காக விவசாய நிலத்தை பறிப்பதன் மூலம் விவசாயத்தை நாமே குழித்தோண்டி புதைத்து வருகிறோம். இந்தானேசியாவில் சமையல் எண்ணெய் என்கிற பெயரில் பாமாயில் இறக்குமதி செய்கிறோம். ஒரு சில நாடுகளில் உணவுக்கு உகந்ததல்ல என்று அதற்கு தடை விதித்துள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட பாமாயிலை இந்தோனேசியா, மலேசியாவில் கிலோ ரூ.60க்கு இறக்குமதி செய்கின்றனர். அதை ரூ.35க்கு மானியமாக அரசு தருகிறது. ரேஷன் கடைகளில் ரூ.25க்கு விற்பனை செய்கிறது. இந்தியாவில் விளைவிக்க கூடிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் இவற்றுக்கு மானியமும் இல்லை. அரசாங்கமும் முன்னின்று சந்தைப்படுத்துவதும் இல்லை. இது, இந்திய விவசாயிகளுக்கு இழைக்கும் அநீதி இல்லையா?.

காந்தி கொள்கையை நாம் குழித்தோண்டி புதைத்து விட்டோம். அப்புறம் ஏன் காந்தி படத்தை ரூ.10 முதல் ரூ.2 ஆயிரம் நோட்டில் போட்டு இருக்கிறோம். காந்தியை கேவலப்படுத்துவதற்காகவா? முதலில் உணவில் தன்னிறைவு அடையுங்கள். நீங்கள் தன்னிறைவு பெறவே இல்லை. உலக அளவில் பஞ்சம் வரும் போது, இங்கு வாழும் 137 கோடி மக்களுக்கு உணவை இறக்குமதி செய்து வயிற்றை நிரப்ப முடியாது. அப்போது ஏற்படும் விளைவை மனதில் வைத்து கொண்டு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சாலை, தொழிற்சாலைகள் எல்லாம் வேண்டாம். திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை தொழில் கொண்டு வந்தீர்கள். நொய்யலாறு நாகரிகமே செத்து போய் விட்டது. அதை எப்போது மீட்டு எடுக்க போகிறோம். வளர்ந்த நாடுகளில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் தடை செய்யப்பட்டுள்ளது. அதை கொண்டு வந்து திருப்பூரில் வைத்து ஆயத்த ஆடை மூலமாக அந்நிய செலவாணி ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றுகூறி கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல் அந்த தொழிலை கொண்டு வந்து நொய்யலாற்றையே கொன்று போட்டு விட்டீர்கள். எப்போது மீட்டெடுக்க போகிறோம். இதனால், நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தடை செய்யப்பட்ட தொழிலை கொண்டு வந்ததால் தான்.

விவசாயிகள் ஏன் வெளியில் போகிறார்கள் என்றால் விவசாயத்தில் வருமானம் இல்லை. அரபு நாடுகளில் ஏன் ஓட்டகம் மேய்க்க போகிறார்கள் என்றால் நல்ல வருமானம் வருகிறது. அதனால், பணம் வாங்கி கொண்டு போகிறார்கள். எனவே, விவசாயத்தை வருமானம் வரும் தொழிலாக மாற்ற வேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் ஒரு ஆணுக்கு பெண் கொடுப்பதில்லை. பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. இன்று இருக்க கூடிய நிலைமையில் ஒட்டுமொத்த நாடும் திசை மாறிக்கொண்டே போகிறது. பெரிய பேரழிவை நோக்கி தான் உலகம் சென்று கொண்டிருக்கிறது. இயற்கைக்கு விரோதமாக போனால் நாம் அழிவோம். செயற்கையில் என்னதான் புதுமைகள் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகத்தின் இயற்கைக்கு மாறுபட்டு சென்றால், அழிவாக தான் இருக்கும்.

கர்நாடகா மாநிலத்தில் 1 லிட்டர் பாலுக்கு ரூ.4 மானியமாக தருகின்றனர். அது எல்லா விவசாயிகளுக்கும் போகும். ஆனால், தமிழ்நாட்டில் மானியம் கிடையாது. பால் உற்பத்தி செய்தவர்கள் யாரும் முன்னேறவில்லை. கறந்த பாலை வாங்கி சந்தைப்படுத்தியவர்கள் விமானத்தில் பறக்கின்றனர். அந்த மாட்டிற்கு தீவனம் தயாரித்தவர்கள் வெளிநாட்டு சொகுசு காரில் பயணம் செய்கின்றனர். ஆனால், பாலை கறந்தவன் ஓட்டை சைக்களில் கேரியரில் வைத்து பால் கூட்டுறவு விற்பனையகத்துக்கு தள்ளிக்கொண்டு செல்கிறார். நாம் இன்னும் முன்னேறவில்லை. சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்று திருவள்ளுவர் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார். அவர், ஏர் (வேளாண்மை) பின்னால் தான் ஒட்டுமொத்த உலகம் என்று கூறுகிறார். அதை செய்ய தவறினால் நாம் அழிந்தே போவோம் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் தருகின்றனர். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்தார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி விவசாயிக்கு கொடுத்தார்கள். தற்போது தான் பாப்பம்மாள் என்கிற விவசாயிக்கு கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற துறைகளில் சாதனை படைத்தார்கள் எனக்கூறி அள்ளி, அள்ளி கொடுக்கின்றனர். விவசாயத்தில் சாதனை படைத்தவர்கள் யாரும் இல்லையா? வேளாண்குடிகள் என்ன இரண்டாம் தர மக்களா? இது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

Related Stories: