தேனீக்களை உறங்க விடுங்கள்!

மனிதர்களைப் போலவே பூச்சி இனங்களுக்கும் உறக்கம் தேவை. அவ்வாறு உறக்கம் கெட்ட பூச்சிகள், மனநிலை (!) பாதிக்கப்பட்டு சீக்கிரமே இறந்துவிடுமாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி தேனீக்கள் இனம் இவ்வாறாக அழிந்து வருகிறது என்று எச்சரிக்கிறது.

காரணம்?

பூ சாகுபடி செய்பவர்கள் தெளிக்கும் ரசாயன உரம்தான். பூக்களில் தேன் சேகரிக்க வரும் தேனீக்களை இந்த ரசாயனம் பாதித்து, அதன் காரணமாக அவை தூக்கம் தொலைக்கின்றனவாம். தொடர்ந்து தூங்காத காரணத்தால் அவற்றால் உணவு தேடி சேகரிக்க முடியாமல் செத்தும் விடுகின்றனவாம். இந்தப் போக்கு தொடருமானால் சுற்றுச்சூழலில் அது மிகப்பெரும் சீர்கேட்டை உருவாக்கி, தாவரங்களின் மகரந்த சேர்க்கையே கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இனியெல்லாம் வெள்ளமே!

சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக நிலநடுக்கோட்டை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வரும் ஆண்டுகளில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படுமென ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ என்கிற சுற்றுச்சூழல் பத்திரிகை எச்சரித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பார்க்கப் போனால் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுமாம்.‘நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு தென்னிந்தியாவில் வெள்ளங்கள்  ஏற்படும்’ என்று அவர்கள் எச்சரித்திருப்பதுதான் இங்கே நாம் கவலையாக பார்க்க  வேண்டிய விஷயம். ஏற்கனவே இந்தப் போக்கு தொடங்கி விட்டதோ என்று சமீபவருட  வெள்ளங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன.2100ஆம் ஆண்டு வாக்கில் இதனால் இப்பகுதிகளில் சரியாக விவசாயம் செய்ய முடியாமல் போகும், பல்லுயிர் உருவாக்கம் கெடும், கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம் விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

Related Stories: