மூளை முடக்குவாதம்: மூளை மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் மூளை முடக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் நடப்பது, ஓடுவது போன்ற நமது உடல் அசைவுகளிலும், நிற்பது, உட்காருவது ஆகிய செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு காலோ, ஒரு கையோ அல்லது இரண்டு கைகளோ அல்லது இரண்டு கால்கள் மட்டுமோ அல்லது இந்த நான்கு உறுப்புகளுமோ பாதிக்கப்படலாம். உடல் முழுவதும் பாதிக்கும்போது கழுத்து தலையை தாங்க முடியாமல் போகலாம். நமது மூளை கருவிலிருக்கும் போதிலிருந்து குழந்தை பருவம் மற்றும் இளமை பருவம் வரை பாதிக்கப்படலாம். எனவே இந்த பாதிப்பை கருவில் இருக்கும்போது, குழந்தை பிறந்தவுடன், பிறந்து சில ஆண்டுகள் என வகைப்படுத்தலாம். நோய்க்கான காரணிகள்: மூளை முடக்குவாதம் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. மரபணு சார்ந்த குறைபாடுகள், வலிப்பு நோய் வந்தால், மனவளர்ச்சி குன்றியிருந்தால், முந்தைய காலங்களில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் கோளாறுகள் இருந்தால், மதுப்பழக்கம் உடைய பெண்களுக்கு, தாய்க்கு சில வைரஸ் நோய்கள் பாதிப்பினால், தூக்க ஊசிகளினால் (பிரசவ வலிக்காக), குழந்தை பிறக்க நீண்ட நேரம் தாமதம் ஆனாலும், முதலிலே தொப்புள்கொடி வந்தாலும், பிரசவத்தின்போது முதலில் தலை வெளிவராமல் அடிப்பகுதியோ கையோ வெளிவந்தாலும், குறைமாத பிரசவத்தினாலும் குழந்தைக்கு மூளை முடக்கு வாதம் ஏற்படுவதோடு மனவளர்ச்சி குறைபாடும் ஏற்படக்கூடும். மூளை முடக்குவாதத்தால் நுண்ணறிவுத் திறன் பாதிக்கப்படுவதில்லை: மூளை முடக்குவாதத்தால் குழந்தையின் நுண்ணறிவுத் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. உலகிலேயே தலைசிறந்த இயற்பியல் நிபுணரான லண்டனைச் சேர்ந்த ஸ்டீபன்ஹாக்கின்ஸை நாம் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு 21வது வயதில் மிகவும் மோசமான நோய் மூளையைப் பாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக எல்லா உறுப்புகளும் செயலிழந்தது. இதனால் அவரை இருசக்கர வாகனத்தில் யாராவது ஒருவர் தள்ளிக்கொண்டுதான் அறிவியல் கூட்டங்களுக்கு செல்வார்கள். அவர் இயற்பியல் கூட்டங்களுக்கும், பிரபஞ்சம் பற்றிய கூட்டங்களுக்கும் செல்வார். காலம், இடம் பற்றி முதன்முதலாக அறிவுப்பூர்வமாக எடுத்துக் கூறியதோடு, தனது கடவுள் மறுப்பு கொள்கைகளையும் உறுதியோடு அவர் பின்பற்றினார். மூளை பாதிப்பால் அவருடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய நுண்ணறிவுத்திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 11 வயது பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: ஒரு டாக்டர் என்னிடம் வந்து அவருடைய தங்கை குழந்தை 6ம் வகுப்பு படிக்கிறாள், அவளுக்கு 11 வயதாகிறது. ஆனால் அவளுக்கு பள்ளி செல்ல முடியாதபடி 2 கால்களும் பின்னிய நிலையில் பாதங்கள் கீழ்நோக்கி உள்ளது. அவளால் நிற்க, நடக்க முடியாததால் வீட்டில் வைத்தே டியூசன் எடுத்து 6ம் வகுப்பு வரை படித்துள்ளார் என்று கூறினார். அந்த குழந்தையை சேர்த்திருந்த மருத்துவமனையில் போய் ஒருநாள் பார்த்தேன். அற்புதமாக பேசிய அந்த குழந்தையால் நிற்க, நடக்க முடியவில்லை. அப்போது நான் இந்தக் குழந்தை நடப்பாள் என அவர்களிடம் உறுதி கூறினேன். அந்த குழந்தையின் இரண்டு தொடைகளின் உள்பகுதியிலும், இரண்டு கால்களின் கணுக்கால் பகுதிகளிலும் சிறிய அறுவை சிகிச்சை செய்து மாவுக்கட்டு போட்டு மறுநாள் அந்தக் குழந்தையை நிற்க வைத்தேன். இன்னும் ஒரு மாதத்தில் உங்கள் குழந்தை நடப்பாள் என்றேன். ஒரு மாதத்திற்குப் பின் அக்குழந்தை வந்தாள். மாவுக்கட்டுகள் பிரிக்கப்பட்டபின் குழந்தை நன்றாக நடந்தாள். பின்னர் பல ஆண்டுகள் அக்குழந்தை வரவே இல்லை. பின்னர் இதேபோல் 100 பேரை தேர்வு செய்து 10 நாட்களாக அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது ஒரு நாள் 6ம் வகுப்பில் அறுவை சிகிச்சை செய்த அந்த பெண்குழந்தை என்னைத் தேடி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கிற்கு வந்தாள். எனக்கோ அவளை அடையாளம் தெரியவில்லை. அப்போது அவள், நான் உங்களிடம்தான் எனது 11 வயதில் சிகிச்சை செய்தேன். தற்போது நான் நல்ல நிலையில் அமெரிக்காவில் இருக்கிறேன். இவரைத்தான் கல்யாணம் பண்ணப் போகிறேன் என்று கூறி அழைப்பிதழ் தந்தாள். அப்போது அப்பெண்ணைப் பார்த்து நான் மிகுந்த மனமகிழ்ச்சியோடும், அந்த 11 வயது குழந்தையா என்றும் அதிர்ந்துபோய் நின்றேன். மூளை முடக்குவாதத்தின் வகைகள், பாதிப்புகள்: மூளை முடக்குவாதம் ஒவ்வொருவரின் வயதின் அடிப்படையில் கணிக்கப்படும். பொதுவாக இதை Spastic, Athetoid, Rigid, Ataxic, Choreiform, Hypotonia, Mixed என்று 7 வகைகளாக பிரிக்கலாம். எல்லாமே தசைகளின் இயக்கங்கள் சார்ந்துதான் இருக்கும். இதில் தசைகள் குறிப்பாக வலுவாக காணப்படுவதை Spastic என்கிறோம். இதனால் தசைகள் சுருங்கி உடல் உறுப்புகளில் ஊனத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் தசைகள் வலு குறைந்து காணப்படுவதை Hypotonia என்கிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் சாதாரணமாக செயல்பட முடியாது. மூளை வளர்ச்சி குன்றியிருந்தால் வாய் பேச முடியாது, நடக்க முடியாது. அதுபோலவே சிலருக்கு அவர்கள் அறியாமலேயே தேவையற்ற அசைவுகள் உடல் உறுப்புகளில் ஏற்படும். சில குழந்தைகள் நடக்கும், ஆனால் தள்ளாடி தள்ளாடி நடக்கும். இதற்கு பயிற்சிதான் தேவை. தசைகள் வலுவாக உள்ள குழந்தைகள்போல் இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. சில நேரங்களில் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்தால் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும். மருத்துவர்கள் தசைகளின் இயக்கத்தை வயதுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை 5 நிலைகளாக பிரிக்கிறார்கள். இதன்படி குழந்தையின் வளர்ச்சியின் மைல்கற்களை நாம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குழந்தை எப்படி, எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிந்துக் கொண்டு, அதற்கேற்றாற்போல் சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்ளலாம். மேலும் அக்குழந்தை எப்படி நடக்கிறது என ஆராய்ந்து குறித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இந்த நோயாளிகளுக்கு மூளை வளர்ச்சி பின்தங்கி இருக்கும். படிக்க கஷ்டப்படுவார்கள், பார்வைக்கோளாறு, சிக்கலான அசைவுகள், வேண்டாத அசைவுகள் ஏற்படும், வலிப்பு நோய் ஏற்படும், தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவார்கள், நுரையீரல் பாதிப்பு, தாழ்வு மனப்பான்மை ஆகியவை ஏற்படும். வயதிற்குத் தகுந்த மூளை வளர்ச்சி இருக்காது. சிகிச்சை முறைகள்: மூளை முடக்கு வாதப் பிரச்னைக்கு மருந்துகள், கம்பிகள் மற்றும் பிரேஸ் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். கால், கைகளை மடித்து நீட்டுவது போன்ற உடலியக்கங்கள் சார்ந்த இயற்கையான பயிற்சிகள் அளிக்கலாம்.அறுவை சிகிச்சைகள்வளைவுகளையும், தசை சுருக்கங்களையும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். தசைகளை நீட்ட அறுவை சிகிச்சை செய்யலாம். சில நேரங்களில் எலும்புகளை வெட்டி சரிசெய்து ஒட்டலாம். நரம்புகளிலும் அறுவை சிகிச்சை செய்யலாம். 2008ம் ஆண்டு 100 மூளை முடக்குவாத பிரச்னையுடைய நபர்களை தேர்வு செய்து, தசைகளை எடுத்து மாற்றி போடுவதற்குப் பதிலாக நரம்புகளை முதுகுதண்டு படத்திலோ அல்லது தொடை, கால், கை போன்ற பகுதியில் ஏற்படும் ஊனத்திற்கு அந்தப் பகுதியிலுள்ள தசைகளுக்கு செல்லும் நரம்புகளைத் தேர்வு செய்து பகுதியாக வெட்டி எடுத்து ஊனங்களை சரி செய்தோம். பெண்களின் பிரசவத்தின்போது குழந்தையுடன் வெளியேவரும் தொப்புள்கொடி மற்றும் பிளாசன்டாவில் இருந்து தயாரிக்கப்பட்ட “பிளாசன்ட்ரெக்ஸ்” என்ற ஊசி மருந்தினை சிறு குழந்தைகளுக்கு (1 முதல் 5 வயது வரை) கொடுத்தபோது மூளை முடக்குவாதத்தினால் ஏற்பட்ட ஊனங்கள் சரியானது. கண்பார்வை, நடை ஆகியவை சரியானது. தலையை தானாகவே தாங்க முடிந்தது. இதற்கு அந்த ஊசி மருந்திலுள்ள மரபணுக்களும், டிஎன்ஏ, ஆர்என்ஏ, நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதச் சத்துக்களுமே காரணமாகும். இவைகள்தான் ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள செல்களில் உள்ளன. அவைகள் நமது உடலில் 21 அமினோ அமிலங்களால் ஆனவை. தற்போது அவைகளுக்குப் பதிலாக தண்டுசெல்கள் (Stem cell) சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. பிளாசன்ட்ரெக்ஸ் ஊசி என்பது நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி ஆய்வு செய்த முறையாகும். எனவே நமது உடலில் நோய் மற்றும் நல்லவைகளை நிர்ணயிப்பது நமது மரபணுக்களே. ெபாதுவாக மூளை முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து ஊசி மருந்துகள் மற்றும் நவீன புதிய அறுவை சிசிச்சை முறைகள் மூலம் அதற்கு முடிவு கட்ட முடியும் என்கிறார் முடநீக்கியல் துறை நிபுணர் ராமகுரு. …
The post மூளை முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியும் appeared first on Dinakaran.