காதலர் தினத்தை முன்னிட்டும் ஏற்றுமதி ஆகாத ரோஜா: வேதனையில் வாடும் விவசாயிகள்

ஓசூர்: காதலர் தின ஏற்றுமதியை மட்டுமே நம்பி சீரான தட்பவெப்பநிலை நிலவும் ஓசூர், தளி, தேன்கனிகோட்டை பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கோர் ரோஜா சாகுபடி செய்துவருகின்றனர். ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில் பசுமை குடில்கள் அமைத்து இங்கு ரோஜா மலர்களை உற்பத்தி செய்துவருகின்றனர். இந்தப் பகுதியில் தாஜ்மஹால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியார், கார்வெட், டிராபிக்கள், அமேசான் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் காதலர் தினத்தன்று மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதி செய்வார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதால், சாகுபடியை விவசாயிகள் நிறுத்தினர். அந்தநிலை மாறி, மெல்லமெல்ல ரோஜா சாகுபடியை மீண்டும் துவங்கினர். அதே போல் இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளுக்கு மட்டுமே ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சரக்கு விமானங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் விமானக்கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி 80 சதவிகிதம் குறைந்து விட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உள்ளூர் சந்தையில் 20 பூக்கள் கொண்ட ஒரு கொத்து 250 முதல் 300 ரூபாய் வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் கிறிஸ்துமஸ், புத்தண்டு முதலே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதை போல தங்களின் வாங்கி கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆண்டுதோறும் காதலர் தினம் என்றால் ரோஜாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆனால் இந்தாண்டு ரோஜா இருந்தும் விற்கமுடியாமல். தவித்து வருகின்றனர். தங்கள் வாழ்க்கை மலர அரசு முழு ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: