திருச்சி கரூர் புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் முட்செடிகள்: உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை அடுத்த திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் உள்ளது குறபாளையம் பிரிவு சாலை. இச்சாலை வழியாக கோயம்புத்தூர், ஈரோடு, காங்கேயம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும் எதிரே நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் மணப்பாறை மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி நோக்கி செல்லவேண்டும் என்றாலும், முசிறி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சிக்கும் கரூருக்கும் செல்ல வேண்டுமென்றாலும் குறபாளையம் பிரிவு ரோட்டை வந்து கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இச்சாலை உள்ளது. இந்நிலையில் கரூர் மார்க்கத்திலிருந்து குளித்தலை நகருக்குள் நுழையும் வாகனங்கள் குறபாளையம் பிரிவு ரோட்டில் இறங்கும்போது திருச்சி மார்க்கத்திலிருந்து வருகின்ற வாகன ஓட்டிகள் அதிவேகமாக வரும்போது இவர்களுக்கு இம்மாதிரியான வளைவு இருப்பது தெரியாமல் போனதால் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட வாழைக்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென குறபாளையம் பிரிவு ரோட்டில் இறங்கும்போது திருச்சியில் இருந்து வந்த வாகனம் மோதியதில் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த சிறிய ஏன் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டு அதில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் குறபாளையம் பிரிவு ரோட்டில் இருபுறமும் 500 மீட்டருக்கு முட்செடிகள் படர்ந்து இருப்பதால்தான். குளித்தலை நகரத்திலிருந்து கரூர் செல்லும் வாகனங்கள் மதியம் வழியாக பிரிவு ரோடு ஏறும்போது முட்செடிகள் அடர்ந்து இருப்பதால் புறவழிச்சாலையில் வரும் வாகனங்களுக்கு தெரியாததால் திடீரென வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்பட நேரிடுகிறது. இதனால் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உரிய நடவடிக்கை எடுத்து குறபாளையம் பிரிவு ரோட்டில் புறவழிச்சாலை இருபுறமும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: