தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நெசவாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கனிமொழி எம்.பி. பேச்சு

உடுமலை: ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காலை கொழுமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பிரசாரத்தை துவக்கி திறந்தவேனில் பேசினார். பின்னர் மலையாண்டிபட்டணத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வீட்டின் தறியில் அமர்ந்து நெசவு செய்தார்.

நெசவாளர்களுடன் கலந்துரையாடலில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இங்கு நெசவாளர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். நெசவாளர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் தி.மு.க. ஆட்சி முனைப்பாக இருந்தது. கைத்தறி துணிகள் விற்பனையின்றி இருந்தபோது, அவற்றையெல்லாம் ‘கோஆப்டெக்ஸ்’ மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தவர் கலைஞர். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. எனவே, நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதற்கு தி.மு.க. ஆட்சி அமைய  நீங்கள் உதவ வேண்டும். தி.மு.க. ஆட்சி வரும்போது, 60 வயதான நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.

Related Stories: