ஐசிசி டெஸ்ட் தரவரிசை 5வது இடத்தில் கோஹ்லி: ஜோ ரூட் முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 5வது இடத்துக்கு பின்தங்கினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிகளின் அடிப்படையில் இல்லாமல் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் ரேங்க் அறிமுகமாகி உள்ளது இந்திய அணிக்கு (430 புள்ளி, 68.3%) பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. தற்போது இங்கிலாந்து (442 புள்ளி, 70.2%), நியூசிலாந்து (420, 70.0%), ஆஸ்திரேலியா (332 புள்ளி, 69.2%) முதல் 3 இடங்களில் உள்ளன.

பைனலில் விளையாடுவதை நியூசிலாந்து உறுதி செய்துவிட்ட நிலையில், இந்தியா - இங்கிலாந்து தொடரின் முடிவின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2வது அணி முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், ஐசிசி நேற்று வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 852 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி அசத்திய இங்கிலாந்து கேப்டன் ரூட் 883 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (919), ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (891) முறையே முதல் 2 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஆஸி. வீரர் லாபுஷேன் 4வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (754) 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (908) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் ஆர்.அஷ்வின் (771) 7வது இடத்திலும், ஜஸ்பிரித் பூம்ரா (769) 8வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (428) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (414) 2வது இடத்துக்கு முன்னேறி உள்ள நிலையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (410) ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார். ஆர்.அஷ்வின் (282) 6வது இடத்தில் நீடிக்கிறார்.

Related Stories: