உத்தரகாண்டில் 4ம் நாளாக மீட்பு பணி சுரங்கத்தில் சிக்கியவர்களை டிரோனில் கண்டறிய முயற்சி

டேராடூன்: உத்தரகாண்டில் திடீர் வெள்ளத்தால் சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளவர்களை டிரோன் மூலமாக கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று பனிப்பாறை உடைந்ததன் காரணாக சமோலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 2 நீர்மின் நிலையங்களில் வேலை செய்த 200 பேர் அடித்து செல்லப்பட்டனர். அங்கு மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. இதுவரை பல்வேறு இடங்களில் இருந்து 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காணாமல் சென்ற 174 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

இது மட்டுமின்றி தபோவான் சுரங்கத்தில் 30 ஊழியர்கள் சிக்கி இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சி 4ம் நாளாக நேற்றும் நீடித்தது. சுரங்கத்திற்குள் செல்வதற்கான வழி முழுவதும் மணல் குவியல்களால் அடைப்பட்டுள்ளது. அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. உள்ளே இருப்பவர்களை கண்டறிய இன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு சுரங்கத்தில் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டி உள்ளது. டிரோன் கேமராக்கள் மூலமாக உள்ளே இருப்பவர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இருட்டாக இருப்பதால் அவற்றின் மூலமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், ரிமோட் வசதி கொண்ட நவீன கருவிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமன்றி சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான ஆக்சினை சுரங்கத்தில் துளையிட்டு உள்ளே செலுத்துவது குறித்தும் மீட்பு குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும், விபத்து நடந்து 4 நாட்களாகி விட்டதால் உள்ளே சிக்கி இருப்பவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே மீட்பு பணிகள் மெத்தனமாக நடப்பதாக கூறி சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களின் உறவினர்கள் மீட்பு குழுவினருடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள 32 சடலங்களின் 8 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: