அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோயில் தை பெருந்திருவிழாவில் தேரோட்டம்

அம்பை : அம்பை அருகேயுள்ள வாகைக்குளத்தில் வாகைபதி ஸ்ரீமன்நாராயணசாமி கோயில் தைப்பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடந்தது.

அம்பை அருகேயுள்ள வாகைக்குளத்தில் வாகைபதி ஸ்ரீமன்நாராயணசாமி கோயிலில் ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தைப் பெருந்திருவிழா கடந்த ஜன.29ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவில் நாராயண சுவாமி சப்பர பவனியாக தண்டியல், அனுமன், கருடன், யானை, பல்லக்கு, நாக வாகனம், வெள்ளைக்குதிரை, இந்திர வாகனம், காளை வாகனம் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் வந்து மக்களுக்கு காட்சி கொடுத்து அருள்வாக்கு அளிப்பார்.

திருவிழாவில் 10ம்நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை முத்திரி கிணற்றில் இருந்து பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வந்து அங்கபிரதட்சணம் செய்தனர். மாலையில் ஏராளமானோர் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. இரவு சப்பர பவனி வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா நாட்களில் தினமும் இரவிலும் பக்தர்களுககு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இக்கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பில் தெப்பக்குளம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: