டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் இதுவரை ரூ.1 லட்சம் கோடி இழப்பு: இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தகவல்

நாக்பூர்: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் இதுவரை ₹1 லட்சம் கோடி வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ்  பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லையில் கடந்த 73 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், விவசாயம் மற்றுமின்றி பல்வேறு வர்த்தகமும் வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக டெல்லிக்கு செல்லும்  வாகனங்களும், டெல்லி வழியாக நாட்டின் பிற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தொடர் போராட்டத்தால் நாட்டின் வர்த்தகத் துறையானது கிட்டதிட்ட ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (கேட்) தேசிய பொதுச் செயலாளர் பிரவீன்  கண்டேல்வால் நாக்பூரில் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டமானது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் நலனுக்காகவே உள்ளது. இருப்பினும், டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தின் காரணமாக நாட்டின்  வர்த்தகம் இதுவரை ரூ. ஒரு லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இந்த போராட்டம் மேலும் பல நாட்கள் நீடித்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கும். டெல்லியைத் தவிர, பல்வேறு தொழிலுக்குத் தேவையான ஏராளமான மூலப்பொருட்கள் டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும்.  போராட்டத்தின் காரணமாக, ரூ.30,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் டெல்லியில் சிக்கியுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ரூ .70,000 கோடி மதிப்புள்ள  பொருட்களும் டெல்லியில் சிக்கியுள்ளன. விவசாயிகளை பொருத்தமட்டில், அவர்கள் அரசின் கடன் தள்ளுபடியுடன் பல்வேறு வகையான மானியங்களையும் பெறுகின்றனர்.

அதேபோல் தொழில்முனைவோரும் அவ்வப்போது மத்திய அரசிடமிருந்து ஏராளமான உதவிகளை பெறுகின்றனர். இருப்பினும், வர்த்தகர்களுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள பல லட்சம் வணிகர்கள்,  தற்போது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் போராடி வருகிறார்கள். இந்த இரண்டு நிறுவனங்களும், மக்களைக் கொள்ளையடிக்கின்றன. நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். சரக்கு மற்றும் சேவை  வரியில் (ஜிஎஸ்டி) பல குறைபாடுகள் உள்ளன. வர்த்தகர்களால் அதன் சுமைகளை தாங்க முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரியானது 937 முறை திருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அவ்வப்போது அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கூட்டமைப்பின் சார்பில் வரும் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த  முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: