கர்நாடகாவில் பெண்கள்,சிறுமிகள் மாயமாகுவது அதிகரிப்பு: கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க முடிவு

பெங்களூரு: மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் புகார்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் ஆண்டுதோறும் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் நடந்த வண்ணமுள்ளது. குறிப்பாக தென்கனரா மற்றும் ஐதராபாத்-கர்நாடக பகுதியில் தான் அதிகம் பெண்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 முதல் 2020 இறுதி வரை 7 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின்படி 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருந்தனர்.

இதில் போலீசாரின் முயற்சியால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போனதில் 4 ஆயிரத்திற்கும மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதி  பெண்கள் மற்றும் சிறுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் நிலையங்களில் பதிவு செய்துள்ள விவரம்  மூலம் தெரியவருகிறது. அவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடந்து வருவதாகவும் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையில் மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போகும் சம்பவம் அதிகரித்து வருவதை தடுப்பது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி நிர்வாகிகள் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் குடும்ப சூழல், காதல் தோல்வி, மனநல பாதிப்பு உள்பட பல காரணங்களால் பெண்கள் காணாமல் போயுள்ள தகவல் கிடைத்தது.

மேலும் சில இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டுள்ள தகவலும் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து பெண்கள் கடத்தப்படுவதை தவிர்க்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி விவரம் பெற்றனர். பின் பெண்கள் கடத்துவதை தவிர்க்க பெங்களூரு, ஹுப்பள்ளி, மைசூரு, பெலகாவி, தென்கனரா, கலபுர்கி, ரெய்ச்சூர், விஜயபுரா, தாவணகெரே மாவட்டங்களில் தனி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், போலீஸ் எஸ்.பி. தகுதியுடைய அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

Related Stories: