ஏலகிரி மலையில் காவல் துறை அமைத்த 12 சிசிடிவி கேமராக்கள் பழுது-சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் காவல் துறை சார்பில் அமைத்த 12 சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டியாக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலம், மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், புதியதாக திருமணமான ஜோடிகள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் இங்கு வருபவர்கள் மூலம் ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூரிலிருந்து, கொட்டையூர் வரை 12 இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தினர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதன்காரணமாக பல குற்றச்சம்பவங்கள் நடப்பது குறைந்தது. இதனால் போலீசார் நிம்மதியடைந்தனர்.

இதுமட்டுமல்லாமல் ஏலகிரி மலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு கீழிருந்து மேலே வரும் பொருட்கள், மேல் இருந்து கீழே செல்லும் பொருட்கள் போன்றவற்றை எளிதாக ஏலகிரி மலை காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தனர். ஆனால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே ஒவ்வொன்றாக பழுதாகி வந்தது. தொடர்ந்து பொருத்தப்பட்ட 12 கேமராக்களும் பழுதாகி பயன்பாடற்று கிடக்கிறது.

இதனால் இங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். குறிப்பாக கடந்த 2 மாதங்களில் மட்டும் ஏலகிரி மலையில் 2 மைனர் பெண், திருமணமான இளம்பெண் கடத்தல், காதல் தம்பதி ஓட்டம், மது அருந்திவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட சம்பவம் போன்றவற்றை கண்டுபிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: