தக்கலையில் ஹெல்மெட் சோதனையின்போது எஸ்ஐ மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி: 3 பேர் தப்பி ஓட்டம்; சிசிடிவி காட்சி வைரல்

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலை டிராபிக் போலீசார் எஸ்ஐ குருநாதன் (52) தலைமையில் நேற்று முன்தினம் மாலை அழகியமண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது  ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் சைகை செய்து நிறுத்துமாறு கூறினர். ஆனால் வேகமாக தப்ப முயன்றனர். இதையடுத்து எஸ்ஐ குருநாதன் மற்றும் போலீஸ்காரர் பீட்டர் ஆகியோர் பைக்கை நிறுத்த முயன்றனர். பைக்கில் பின்னால் இருந்த ஒரு வாலிபர், இத்தோடு செத்து தொலைந்து போ என கூறியவாறு எஸ்ஐயை காலால் எட்டி உதைத்தார். மற்றொரு வாலிபர், போலீஸ்காரரை எட்டி உதைத்துள்ளார். பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது பைக்கால் மோதி விட்டு மூவரும் தப்பினர்.

பைக் மோதியதில் எஸ்ஐக்கு வலது முழங்கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தக்கலை போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் தக்கலையை சேர்ந்த மெரின்தாஸ் (19), விஜின் (19) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவர் மீதும் கொலை முயற்சி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஐ மீது பைக் மோதி கொல்ல முயன்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: