பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி போலி விமான டிக்கெட்டில் வந்த ஆந்திர இளம்பெண்; விமான நிலையத்தில் பரபரப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் (25), அவருடைய மனைவி சாமா (23) ஆகியோர், இ-டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாமா மட்டும் வெளியே வந்தார். அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, ‘‘நான் பயணத்தை ரத்து செய்து விட்டேன்,’’ என்று கூறினர். அவரது இ-டிக்கெட்டை பரிசோதித்தபோது, அதில் எந்த முத்திரையும் இல்லை. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் கூறியதாவது: நாங்கள் சமீபத்தில் திருமணமான இளம்தம்பதி. எனது கணவர் வேலைக்காக சார்ஜா செல்கிறார். அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமான நிலையம் வந்தேன். என்னை உள்ளே அனுமதிக்காததால், எனது கணவரின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதில் எனது பெயரையும் இணைத்து அதை காண்பித்து உள்ளே சென்றேன். உள்ளே நானும், கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம். பின்பு அவர் விமானத்தில் சார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து, நான் வீட்டுக்கு புறப்பட வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்து விடுங்கள்,’’ என்றார். ஆனால், அவரை கைது செய்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: