சசிகலா நாளை மறுதினம் சென்னை வருகை எதிரொலி; இபிஎஸ், ஓபிஎஸ் அவசர ஆலோசனை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பு

சென்னை: பெங்களூரில் இருந்து சசிகலா நாளை மறுதினம் சென்னை வருகிறார். இதையொட்டி, இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவருக்கு கொரோனா நோய் முற்றிலும் குணமான நிலையில் பெங்களூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், பெங்களூர் மருத்துவமனையில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது.

மேலும், அவர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில்தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது அதிமுகவினரிடம் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம்? என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதோடு நிற்காமல், நேற்று முன்தினம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது நேரடியாக புகாரும் அளித்தனர்.

புகார் மனுவில், `அதிமுக உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, தனது காரில் அதிமுக கொடி கட்டியுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர். இந்த சூழ்நிலையில், பெங்களூரில் தங்கி ஓய்வு எடுத்துவரும் சசிகலா 8ம் தேதி (நாளை மறுதினம்) ெசன்னை வருகிறார். அவருக்கு அமமுக சார்பில் மிக பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து வரும் சசிகலா காரை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான கார்களில் அணிவகுத்து வரவும் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து வரும்போதும், சசிகலா தனது காரில் அதிமுக கொடியை கட்டி வர திட்டமிட்டுள்ளார். அதனால், அதை தடுக்கதான் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் சசிகலா நாளை மறுதினம் பெங்களூரில் இருந்து தமிழக எல்லைக்குள் காரில் வரும்போது, ஆயிரக்கணக்கான போலீசாரை நிறுத்தி சசிகலாவை கைது செய்வது அல்லது அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே ஒருவித பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகளை சசிகலா பக்கம் செல்லாமல் தடுப்பது, அதையும் மீறி ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அடுத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி சேர உள்ள கட்சிகள் குறித்தும், அவர்களுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக அதிக நெருக்கடி கொடுத்து வருகிறது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸ் முன் வைத்தார். இது தொடர்பாக அதிமுக - பாமக நிர்வாகிகள் அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறார்கள். ஆனாலும் உடன்பாடு ஏற்படாமல் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அதேபோன்று தேமுதிகவும் கூடுதல் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. வருகிற 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

அதனால், ஏராளமான கட்சி தொண்டர்களை 14ம் தேதி சென்னை அழைத்து வருவது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட உள்ளனர். சசிகலா சென்னை வருகை, தேர்தல் கூட்டணி, பிரதமர் தமிழகம் வருகை உள்ளிட்ட வைகள் குறித்து, இன்று மாலை நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி இல்லை

சசிகலா பெங்களூரில் இருந்து நாளை மறுதினம் சாலைமார்க்கமாக சென்னை வருகிறார். அவருடன் பெங்களூர் சிறையில் இருந்து நேற்று விடுதலையான இளவரசியும் வருகிறார். சசிகலாவுக்கு வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். வேலூரில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ கலெக்டரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதேபோன்று சென்னையில் போரூரில் இருந்து சென்னை நகருக்குள் வரும் வழியில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க, சசிகலாவின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் சென்னை மாநகர போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரது கோரிக்கையை சென்னை போலீஸ் கமிஷனர் இன்று காலை நிராகரித்து விட்டார். சென்னைக்குள் ஊர்வலம், பேரணி, வரவேற்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. போலீசாரின் தடையையும் மீறி சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும், கார்கள் அணிவகுப்புடன் அவரை சென்னைக்குள் அழைத்து வரவும் அமமுக கட்சியினரும், சசிகலா ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: