கூடலூர், குன்னூரில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கூடலூர்: கர்நாடக சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 31ம் தேதி மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் ஆனார். அவரை வரவேற்று சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் போஸ்டர் அடித்தனர். அவர்கள் மீது அ.தி.மு.க. தலைமை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கூடலூரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தாலுகா அலுவலக வளாகம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் தம்பி ராமசாமி என்பவர் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. சோதனைகளை வென்று சாதனைகள் படைக்க தமிழகம் வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரே வருக என போஸ்டரில் எழுதப்பட்டு உள்ளது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் நேற்று ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதைப்பார்த்து அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. மாவட்ட  நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய சம்பவம் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: