பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்.:ஆளுநர் முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பு... உச்சநீதிமன்றத்தில் வரும் 9-ம் தேதி விசாரணை

டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக வருகிற 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உள்ள பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில்  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

இதனால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்தது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

உச்சநீதிமன்ற அளித்த ஒரு வார கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை உடன் முடிவடைந்தது. தற்போது வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார். இதனால் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Stories: