நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்தவங்கி கூட இல்லை: மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தகவல்

டெல்லி: இந்தியா முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்தவங்கி கூட இல்லை என மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அறிக்கை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி கூடியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை காங்கிரஸ் உட்பட 20 கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மாநிலங்களவை நேற்று காலை கூடியது.

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று மீண்டும் கூடியது. அப்போது ரத்த வங்கி குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதிலளித்தார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில்; நாட்டிலேயே அதிகபட்சமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 14 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. அடுத்ததாக மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை.

நாகாலாந்தில் 9 மாவட்டங்களிலும் மேகாலயாவில் 7 மாவட்டங்களிலும் அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா ஐந்து மாவட்டங்களிலும் ஒரு ரத்த வங்கி கூட இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 மாவட்டங்களிலும் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களிலும் சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை என குறிப்பிட்டிருந்தார். கடந்த 2019-20ம் ஆண்டுகளில் 3321 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் 1.27 கோடி யூனிட் ரத்தம் பெற்றுள்ளது. மேலும், பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது.

எனவே தேவைக்கேற்ப ரத்த வங்கிகளை நிறுவுவதை உறுதி செய்வது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பு, ஆனாலும் மாநில அரசுகள் கோரிக்கைகள் விடுக்கும்பட்சத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்படும். இதுவரை ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்கவில்லை என்ற புகார் வந்ததில்லை. தன்னார்வ அமைப்புகள் மூலம் 24 மணி நேரமும் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: