எடப்பாடி பக்தர்கள் இன்று பழநி வருகை 25 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு-மலைக்கோயிலில் இரவு தங்கி வழிபாடு

பழநி : பழநி மலைக்கோயிலுக்கு எடப்பாடி பக்தர்கள் இன்று வருகின்றனர். இவர்களுக்காக 25 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். 361 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குழுவினர் பழநிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தைப்பூசம் முடிந்த பின்னரே பழநி கோயிலை வந்தடைவர்.

இக்குழுவினர் இன்று அதிகாலை மானூர் சண்முக நதி ஆற்றங்கரைக்கு வந்தடைவர். ஆற்றங்கரையில் குளித்து முடித்து விட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கிளம்புவர். சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை உள்ளிட்டவைகளில் பங்கேற்று இன்றிரவு மலைக்கோயிலிலேயே தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர்.

கொரோனா காரணமாக இம்முறை மலைக்கோயிலில் 500 பேர் மட்டுமே தங்குமாறு கோயில் நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடியில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.

இவர்களுக்காக அடிவார பகுதியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணியில் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.எடப்பாடியை சேர்ந்த திருக்கை வேலுச்சாமி கூறுகையில், ‘‘எங்களுக்கு மட்டுமே பழநி மலைக்கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி உள்ளது. எங்களது குழுவினருக்காக நாங்களே பஞ்சாமிர்தம் தயாரித்துக் கொள்வோம்.

சுமார் 25 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்காக 10 டன் வாழைப்பழம், 30 கிலோ சர்க்கரை, 50 பேரீச்சை மூட்டைகள், 20 தேன் டின்கள், 20 நெய் டின்கள், 20 கற்கண்டு மூட்டைகள், 15 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: