பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவர் இடிப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் இருந்து அத்தியாவசிய தேவை பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவமனை செல்வதற்கும், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலூர், சிதம்பரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்ட சுற்று சுவர் மர்ம நபர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளதை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அப்பகுதியில் உள்ளவர்கள் சுவரில் விரிசல் விட்டதால் உடைத்ததாகவும், அவர்களது சொந்த செலவில் மீண்டும் சுவர் எழுப்பி தருவதாக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இறுதிவரை உடைத்தது யார் என்று கூறவில்லை.

சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பல நாட்களாகியும் அதனை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடாமல் இருப்பதால், மேலும் சிலர் சுற்றுச்சுவரை இடிப்பதற்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: