கலசபாக்கம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 20 பேருக்கு திடீர் காய்ச்சல்-மருத்துவக்குழுவினர் முகாம்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில், பைப்லைன் உடைந்ததால் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது.

இந்த குடிநீரை குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த டாக்டர் மேஜர் சிவஞானம், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு மற்றும் சுகாதாரத்துறையினர் கிராமத்தில் முகாமிட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை சேகரித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே அவர்களுக்கு எந்தவிதமான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

இந்நிலையில், சேதமடைந்த  குடிநீர் பைப்லைனை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்துள்ளனர்.மேலும், மருத்துவக்குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: