டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ரிஹானா, கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் ஆதரவு : பாஜகவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி!!

டெல்லி : விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகை ரிஹானா குரல் கொடுத்த பின்னர் உலக அளவில் விவசாயிகள் போராட்டம் கவனம் பெற்றுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல், சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

நடிகை மியா கலிஃபாவும், விவசாயிகள் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.அவர், ‘டெல்லியில் எந்த மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. போராட்டக் களத்தில் இணைய சேவையைத் துண்டித்து விட்டார்களமே’ என்று ஒரு ட்வீட்டிலும்,‘விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படியென்றால், விருது வழங்கும் விழாக்களில் அவர்களையும் பரிசீலிக்காமல் விட்டுவிடக் கூடாது. நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்று இன்னொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருவது பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: