திருமங்கலம் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வந்தது-விவசாயிகள் மகிழ்ச்சி

திருமங்கலம்:  மதுரை மாவட்டத்தில் வைகை தண்ணீர் பெரியார் பிரதான கால்வாய் வழியாக பேரணையிலிருந்து குப்பணம்பட்டி வரையில் செல்கிறது. இக்கால்வாயில் நீர்வரத்து அதிகரிக்கும் போது திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக உபரி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த தண்ணீரும் விக்கிரமங்கலம் கண்மாய் வரையில் மட்டுமே வரும். இந்த ஆண்டு பருவமழை பொழிவு அதிகமிருந்ததால் உபரிநீர் அதிகளவில் இருந்தது.

 நேற்று முன்தினம் திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக 27 கிராமங்களுக்கு விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் முதலைகுளம், கருகப்பிலை, கண்ணனூர், பன்னியான், கொக்குளம், புளியங்குளம், சொரிகாம்பட்டி, கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கரடிக்கல், ஊராண்டஉரப்பனூர், உரப்பனூர் பெரியகண்மாய், சின்னகண்மாய்,, குதிரைசாரிகுளம், மறவன்குளத்திற்கு செல்ல உள்ளது. நேற்று காலை இந்த தண்ணீர் உரப்பனூர் பெரிய கண்மாய்க்கு வந்தது. இதையொட்டி உரப்பனூர் கிராம விவசாயிகள், மக்கள் கண்மாய் மதகிற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் தொடர்ந்து கண்மாய் தண்ணீர் பாய்ந்தோடியது.

விவசாயிகள் கூறுகையில், ‘நீண்ட நாளுக்கு பின் உரப்பனூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது மகிழ்ச்சியளித்துள்ளது. இதன்மூலம் விவசாயமும், குடிநீர் பிரச்னையும் தீரும்’ என்றனர்.

Related Stories: