மியான்மரில் ராணுவ ஆட்சி வீட்டுக்காவலில் 400 எம்பிக்கள்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து, 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் கடந்த நவம்பரில் பொது தேர்தல் நடந்தது. தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ராணுவம் குற்றஞ்சாட்டி வந்தது. நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட இருந்தது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் அங்கு ராணுவ புரட்சி வெடித்தது. அரசின் ஆலோசகர் ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைண்ட் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாக கைது செய்தது. அவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து ராணுவ ஜெனரல் மின் ஹாங் ஹியாங் நாட்டின் தலைவராக ஒரு ஆண்டுக்கு இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ ஜெனரல்கள், முன்னாள் ஜெனரல்கள் உள்ளிட்டோர் அடங்கிய 11 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சுமார் 400 உறுப்பினர்கள் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது அரசு குடியிருப்புக்களுக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளனர்.

அவர்களது வீடுகளை சுற்றி ராணுவத்தின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,‘‘அரசு குடியிருப்பு வளாகத்திற்குள் இருக்கும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடிகின்றது. எங்களது பகுதியில் உள்ளவர்களுடன் செல்போன் மூலமாக பேச முடிகின்றது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. குடியிருப்புக்குள் போலீசாரும், குடியிருப்புக்கு வெளியே ராணுவ வீரர்களும் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குங்கள். தேவையற்ற பயணங்களை தவிருங்கள். அவசியம் ஏற்படின் தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: