பயன்படுத்தாமல் உள்ள 21 ஆயிரம் கோடி: மேலவை உறுப்பினர்களுக்கு மானியமாக வழங்க நடவடிக்கை: கனிம வளத்துறை அமைச்சர் நிராணி பதில்

வங்கியில் பயன்படுத்தாமல் உள்ள கனிமவள  மேம்பாட்டு நிதி 21 ஆயிரம் கோடி நீதிமன்றத்தின் அனுமதியுடன் விரைவில் மேலவை உறுப்பினர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி  தெரிவித்தார்.  கர்நாடக சட்டமேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மஜத உறுப்பினர் காந்தராஜ் சார்பில் உறுப்பினர் பசவராஜ் ஹொரட்டி பேசும்ேபாது, மாவட்ட கனிம அறக்கட்டளையில் இருக்கும் நிதியை மேலவை  உறுப்பினர்களுக்கு மானியமாக வழங்கும் விஷயத்தில் ஏற்ற-தாழ்வு காட்டப்படுகிறது. குறிப்பாக மேலவை உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. ஆனால் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வித்தியாசம் எதற்கு என்று  கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக ஆளும் பாஜ, காங்கிரஸ். மஜத உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசும்போது, மாவட்ட கனிம வள அறக்கட்டளையில் உள்ள நிதி ஒதுக்கீடு செய்வது  மட்டுமில்லாமல், பல வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மேலவை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

மாநில அரசின் பார்வையில் மேலவை உறுப்பினர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல் பார்க்கப்படுகிறது. இது மாற வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக பாஜ உறுப்பினர் ஒய்.ஏ.நாராயணசாமி குரல் கொடுத்தார். மேலவை உறுப்பினர்கள்  எழுப்பிய கேள்விக்கு கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி பதிலளிக்கையில், மாவட்ட கனிமவள மேம்பாட்டு அறக்கட்டளைக்கு அனைத்து வகை கனிம சுரங்கங்கள் இயங்கி வரு மாவட்டங்களில் இருந்து நிதி ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. மாவட்ட கனிம வள நிதி அறக்கட்டளையில் சேமிக்கப்படும் நிதியை அனைத்து மாவட்டங்களில் உள்ள பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. வழங்கவும் முடியாது. மாநிலத்தில் சுரங்க தொழில்  நடந்து வரும் கோலார், பல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, துமகூரு மாவட்டங்களில் மட்டும் சுரங்க தொழில் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், பாலங்கள், தொழிலாளர் குடும்பங்கள், தொழிலாளர்களின் சுகாதார காப்பீடு உள்ளிட்ட  தேவைகளுக்கு மட்டும் பயன்படுகிறது. சம்மந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் அறக்கட்டளையில் பதிவு செய்திருந்தால் மட்டுமே மானியம் வழங்கப்படும். பிற மாவட்டங்களை சேர்ந்த பேரவை,  மேலவை உறுப்பினர்களுக்கு வழங்குவதில்லை’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட உறுப்பினர் சி,.எம்.இப்ராஹிம், மேலவை உறுப்பினர்களாக இருப்பவர்கள், குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பாளிகளாக இல்லாமல், மாநிலம் முழுவதும் 6 ஆண்டுகள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கிறோம்.  எங்களுக்கு மானியம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்ற-தாழ்வு ஏன் என்று கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. அதன்பின் அமைச்சர் நிராணி பேசும்போது, மாநிலத்தில் கனிமவள மேம்பாட்டு நிதி ரூ.18 ஆயிரம்  கோடி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளதால், வங்கிகளில் வட்டி மூலம் ரூ.3 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி பயன்படுத்தாமல் உள்ளது. இதை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறப்பு  வக்கீல்கள் நியமனம் செய்து, இன்னும் சில மாதங்களில் மேலவை உறுப்பினர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என்றார்.

Related Stories: